கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் நாற்றுகள் கருகும் அபாயம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் நாற்றுகள் கருகும் அபாயம்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 8:46 PM GMT)

உழவயல் வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் நாற்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவோணம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளளர்.

ஒரத்தநாடு, 


தஞ்சை மாவட்டம் செல்லம்பட்டியிலிருந்து கல்லணைக்கால்வாய் ஆற்றில் சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உழவயல் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் மூலம் ராஜாளிவிடுதி, பணிகொண்டான்விடுதி, காடுவெட்டிவிடுதி, சிவவிடுதி, குழந்திரான்பட்டு, பில்லக்குறிச்சி, ராங்கியன்விடுதி, வெட்டுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 860 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த பாசன பகுதிக்குள் 12-க்கும் மேற்பட்ட ஏரி-குளங் கள் உள்ளது. இவை அனைத்தும் உழவயல் வாய்க்காலின் பாசன பகுதிகளாகும்.

மேட்டூர் அணை மற்றும் கல்லணை ஆகியவைகள் திறக்கப்பட்டு 65 நாட்கள் கடந்த நிலையில் உழவயல் வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளவையும் எட்டியதால் எப்படியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துசேரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பம்புசெட் மூலமாக நாற்றுநட்டு தயாராக இருந்தனர்.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தப்படி தண்ணீர் வந்து சேராததால் நாற்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கொண்டுள்ள உழவயல் வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story