ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடிவு
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(திங்கட்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முழுஅடைப்பு போராட்டம்
இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.68 ஆகவும், டீசல் ரூ.76.18 ஆகவும் விற்பனையானது. பெட்ரோல் விலை 100 ரூபாயை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் பெட்ேராலிய பொருட்களின் விலையை குறைக்க மாட்டோம் என்றுமத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைக்க...
இதற்கிடையே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
அதுபோல் ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.2 வரை குறைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடகத்திலும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று இருந்த முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
வருவாய் இழப்பு ஏற்படும்
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும், அதை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
தொடர் விலை ஏற்றத்திற்கு இடையே மாநில அரசின் பெட்ரோல்-டீசல் விலை குறைப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த விலை குறைப்பு முடிவு கர்நாடக வாகன ஓட்டிகளுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
Related Tags :
Next Story