வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது மைசூரு அரண்மனை எங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளது மகாராணி பிரமோதாதேவி பேட்டி


வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது மைசூரு அரண்மனை எங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளது மகாராணி பிரமோதாதேவி பேட்டி
x
தினத்தந்தி 17 Sept 2018 4:30 AM IST (Updated: 17 Sept 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அரண்மனை எங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் மகாராணி பிரமோதாதேவி தெரிவித்தார்.

மைசூரு, 

மைசூரு அரண்மனை எங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் மகாராணி பிரமோதாதேவி தெரிவித்தார்.

பிரமோதாதேவி பேட்டி

மைசூரு அரண்மனையில் மகாராணி பிரமோதாதேவி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு அரண்மனை கர்நாடக அரசுக்கு சொந்தமானது என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இதுவரை அரண்மனை எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை இந்த அரண்மனை எங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தங்க அம்பாரியும் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதனால் தான் அரண்மனையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் அது வைக்கப்பட்டுள்ளது. அதில் தவறு எதுவும் இல்லை.

அரசியலுக்கு வரமாட்டேன்

தசரா விழாவில் பங்கேற்க அரசு சார்பில் மன்னர் குடும்பத்தினருக்கு கவுரவ நிதி வழங்கக் கூடாது என்று எழுத்தாளர் நஞ்சேராஜா அர்ஸ் கூறியிருப்பது பற்றி நாங்கள் கவலை படவில்லை. இதுபற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனெனில் அரண்மனை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நடப்பு ஆண்டில் தசரா விழா நடத்த நாங்கள் அரசுக்கு முழுஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

எனக்கு அரசியல் மீது ஆர்வம் கிடையாது. எனவே நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது மகன் யதுவீர் அரசியலுக்கு வருவதும், வராததும் அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிடமாட்டேன்.

வருவாய் இழப்பு

மைசூரு அரண்மனையில் உள்ள ஜெகன்மோகன் அரண்மனையின் மேற்கூரை சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அந்த அரண்மனையை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஜெகன்மோகன் அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையிட்டார்

முன்னதாக ஜெகன்மோகன் அரண்மனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மகாராணி பிரமோதாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story