கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை எடியூரப்பா சொல்கிறார்


கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஹாசன், 

கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எந்த சம்பந்தமும் இல்லை

கர்நாடக பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவின் உறவினர் திருமண நிச்சயார்த்தம் நேற்று ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் நடந்தது. இதில் எடியூரப்பா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கும், எங்களுக்கும் (பா.ஜனதா) எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரசின் உட்கட்சி பிரச்சினைக்கு பா.ஜனதா தான் காரணம் என்று தேவையில்லாத குற்றச்சாட்டை சிலர் கூறி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அரிசிகெரேயில் போதிய மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியையும் செய்யவில்லை.

ஆட்சியை கவிழ்க்க..

குமாரசாமி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடுமோ? என்ற பயத்தில் அவர் உள்ளார். குமாரசாமி கூட்டணி அரசை காப்பாற்றுவதை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

நாங்கள் (பா.ஜனதா) கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. உட்கட்சி பிரச்சினையால் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்து விடும். பதவியை தக்க வைக்க போராடும் குமாரசாமி, மாநில வளர்ச்சி பற்றி கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story