மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்


மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:54 PM GMT (Updated: 16 Sep 2018 10:54 PM GMT)

சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சேலம்,

இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க. அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குட்கா ஊழல் சம்பந்தமாக அமைச்சர் வீடு மட்டுமின்றி காவல்துறை தலைவர் வீட்டிலேயே சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. அதனை வலியுறுத்தும் விதமாக அ.தி.மு.க. அரசின் ஊழல் போக்கை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகிறார்.

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று முதன் முறையாக சேலத்திற்கு அவர் வருவது, கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழலை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று (திங்கட்கிழமை) இரவு சேலத்திற்கு வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதால், அவரது உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள், கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story