திப்பம்பட்டியில் பாலத்தின் கீழ் கிடந்த மூட்டையால் பரபரப்பு


திப்பம்பட்டியில் பாலத்தின் கீழ் கிடந்த மூட்டையால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 6:49 PM IST)
t-max-icont-min-icon

திப்பம்பட்டியில் பாலத்தின் கீழ் கிடந்த மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி உடுமலை ரோடு திப்பம்பட்டியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு மூட்டை கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதை பார்க்கும் போது ஒரு ஆளை கொலை செய்து மூட்டை கட்டி கொண்டு வந்து போட்டு இருப்பது போல் தெரிந்தது. இதுதொடர்பான தகவல் சுற்றுப்புற பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

இதையடுத்து பொதுமக்கள் பாலத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

மூட்டை பிளக்ஸ் பேனரால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் ரத்தக்கறை எதுவும் இல்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் மூட்டையை பிரித்து பார்த்ததில், வாழை மட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு வாழை மரங்கள் கட்டப்பட்டது என்றும், நிகழ்ச்சி முடிந்ததும் அவற்றை மூட்டை கட்டி பாலத்தின் கீழ் பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இதுபோன்று மூட்டைகளை கட்டி கழிவுகளை நீர்நிலைகள், பாலங்கள், ஓடைகளில் போட கூடாது. முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திப்பம்பட்டியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.


Next Story