கடம்பூர் அருகே ரோட்டோர மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்தது; வாலிபர் சாவு


கடம்பூர் அருகே ரோட்டோர மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்தது; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:00 AM IST (Updated: 17 Sept 2018 7:40 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே ரோட்டோர மரத்தில் பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் இறந்தார். 20–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லியில் இருந்து பசுவணாபுரம் வழியாக சத்தியமங்கலத்தை நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்றுகொண்டு இருந்தது. பஸ்சில் 60–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் பிரபாகரன் என்பவர் பஸ்சை ஓட்டினார். காலை 10½ மணி அளவில் பங்களாமேடு என்ற இடம் அருகே பஸ் வந்துகொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோட்டு ஓரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போது உள்ளே இருந்த பயணிகள் ‘அய்யோ அம்மா‘ என்ற அலறி துடித்தார்கள்.

பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்த காடகநல்லியை சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 25) என்ற வாலிபர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தார்கள்.

விபத்து பற்றி உடனே கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். சத்தி, புளியம்பட்டி, டி.என்.பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

படுகாயமடைந்தவர்களில் 8 பேர் 108 ஆம்புலன்சில் பசுவணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், 15 பேர் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த சவுந்தர்ராஜனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story