வரத்துகால்வாயை சீரமைத்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை


வரத்துகால்வாயை சீரமைத்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 8:49 PM IST)
t-max-icont-min-icon

பழமைவாய்ந்த சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் கொண்டு வரும் வகையில் வரத்துக்கால்வாயை சீரமைத்து அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை நகரின் மைய பகுதியில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த குளத்தில் இருந்து சிவகங்கை மன்னர்களின் அரண்மனைக்குள் அமைக்கப்பட்டுள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் வழி உள்ளது. முன்பு எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இந்த தெப்பகுளம், தற்போது வரத்துக்கால்வாய்கள் தூர்ந்து போனதால் மழைநீர் வராமல் வறண்டுபோனது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தெப்பகுளத்திற்கு பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. பின்னர் உரிய பராமரிப்பு இல்லாததால் தெப்பக்குளம் மீண்டும் வறண்டது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் தெப்பகுளத்தை சீரமைத்தது. இருப்பினும் போதிய மழை இல்லாததால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.

இதனால் சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்த அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். மேலும் ஏற்கனவே பழைய காலத்தில் இருந்தபடி மழைநீர் தெப்பக்குளத்திற்கு செல்வதற்கும், பெரியாற்று தண்ணீர் கொண்டு வருவதற்கும் வசதியாக ஏற்கனவே இருந்த வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார்.

அதன்படி நேற்று அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, சிவகங்கை தாசில்தார் ராஜா, ஒன்றிய ஆணையாளர் நிர்மல்குமார், நகராட்சி ஆணையாளர் அயூப்கான் மற்றும் அதிகாரிகள் சிவகங்கை நகர் எல்லையான காஞ்சிரங்காலில் இருந்து தெப்பக்குளம் வரை சுமார் 4 கி.மீ. தூரமுள்ள வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியை தொடங்கிவைத்தனர். பின்னர் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story