பெட்ரோல் –டீசல் விலையை குறைக்க வேண்டும் முதல்–அமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை
பெட்ரோல்–டீசல் விலையை குறைக்க வேண்டும் என முதல்–அமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஈரோடு,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய–மாநில அரசுகளின் வரியை குறைத்து விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் ஆந்திரா, ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்–மந்திரிகள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் பெட்ரோல்–டீசல் விலையை குறைக்க தமிழக முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வரலாறு காணாத விலையேற்றத்தால் தொழில்கள் முடங்கி, தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். தமிழக மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் முதல்–அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெட்ரோல்–டீசல் விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.