சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை மனு
பட்டினமருதூர் கிராமத்துக்கு சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அப்போது ஓட்டப்பிடாரம் தாலுகா பட்டினமருதூர் கிராம மக்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 400 குடும்பங்கள் உள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே மும்முனை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. பட்டினமருதூர் கிழக்கு, வடக்கு பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகவும் குறைந்த அளவு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்உபயோக பொருட்கள் இயங்குவது இல்லை. இதனால் சிரமம் ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்‘ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த மச்சேந்திரன் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பகுதி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் சலவை தொழிலாளர் சமுதாய தலைவர் குட்டியப்பன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘20 குடும்பத்தை சேர்ந்த நாங்கள் ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால்கரை ஓரம் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். நாங்கள் சலவை தொழில் செய்து வருகிறோம். தற்போது நாங்கள் இருக்கும் இடம் புறம்போக்கு என்றும், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் தாசில்தார் கூறி வருகிறார். நாங்கள் வீடுகளை காலி செய்தால் அருகில் தங்க வசதி இல்லை. எங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும். நாங்கள் வீட்டை காலி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும். நாங்கள் காலி செய்யும் இடத்துக்கு அருகே பட்டா வழங்கி, முதல்-அமைச்சர் அறிவித்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டி தர வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story