குன்றத்தூர் அருகே தனியார் கம்பெனியில் 5 டன் செம்பு கம்பிகள் திருட்டு


குன்றத்தூர் அருகே தனியார் கம்பெனியில் 5 டன் செம்பு கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:00 AM IST (Updated: 18 Sept 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே, தனியார் கம்பெனியில் 5 டன் செம்பு கம்பிகளை திருடிச்சென்ற கொள்ளையர்களை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல்(வயது 40). இவர், குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் வயர்களில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் அலுமினியங்களை தனியாக பிரித்து எடுக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கம்பெனியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை வழக்கம்போல் கம்பெனியை திறந்தபோது, கம்பெனிக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 5 டன் செம்பு கம்பிகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கம்பெனிக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர், கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்தனர். ஆனால் முடியாததால், பக்கத்து கம்பெனியில் இருந்த இரும்பு தகடுகளை பிரித்து எடுத்து, அதன் வழியாக அப்துல் கம்பெனிக்குள் புகுந்தனர்.

பின்னர் அங்கு வயரில் இருந்து பிரித்து வைக்கப்பட்டு தயாராக இருந்த செம்பு கம்பிகளை 3 பேரும் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கம்பெனியில் வைத்துவிட்டு, அதனை கோணிப்பையில் வைத்துக்கொண்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அளவுக்கு அதிகமான செம்பு கம்பிகளை எடுத்து செல்ல முடியாததால் சில மூட்டைகளை அங்கேயே விட்டுச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story