ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாய் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு


ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாய் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:15 AM IST (Updated: 18 Sept 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாய் 20 வருடங்களுக்கு பிறகு தற்போது ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று, ஸ்ரீபெரும்புதூர் ஏரி. சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் நீர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது இந்த ஏரி முற்றிலும் வறண்டுபோய் காணப்படுகிறது. மழை காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பி, அதில் இருந்து வெளியேறும் உபரி நீரானது, கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் சென்று கலக்கும்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாய் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பி கால்வாயில் வெளியேறும் உபரிநீரானது, ஸ்ரீபெரும்புதூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.

எனவே ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரவேண்டும் என தமிழக அரசுக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சீரமைக்க, மழை வெள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு பாதுகாப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் மார்கண்டேயன் மேற்பார்வையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாயை 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி, போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தியதுடன், அதில் உள்ள மண்ணை அள்ளி கால்வாயின் இருபக்க கரைகளையும் பலப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளை வரும் மழைகாலத்துக்கு முன்பாகவே விரைந்து செய்துமுடிக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.

Next Story