மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட்மாநகரை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை டவுன் பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் உள்ள பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அப்போது அம்பாளுக்கு சுவாமி காட்சி மண்டபத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நேரத்தில் பாலத்தை அகற்றி வேலை நடந்தால் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே திருவிழா முடிந்த பிறகு பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை அருகே ராமையன்பட்டி பஞ்சாயத்து கம்மாளன்குளத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை பழுதுபார்க்க வேண்டும். இல்லை எனில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெற்குசெழியநல்லூர் செயலாளர் மாரிசுடலை தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர், அரசு நிலத்தில் சூரிய மின் ஒளி பெறுகின்ற தகடுகளை போட்டு உள்ளனர். இதை உடனே அகற்றி அவர்களுக்குரிய சொந்த நிலத்தில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள வடகரை கீழ்பிடாகை கிராம மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால் எங்களுடைய வீட்டை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி விட்டு எங்களை காலி செய்ய வற்புறுத்துகின்றனர் என்று கூறி உள்ளனர்.
நெல்லை டவுனை சேர்ந்த சலவை தொழிலாளர்கள், தங்களுக்கு இலவச இஸ்திரி பெட்டி வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். மேலப்பாளையம் அழகிரிநகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பூங்கா அமைப்பதாக கூறி உரக்கிடங்கு அமைப்பதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்று மனு கொடுத்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 82) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தான் பல முறை தனது நிலத்திற்கு பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வாசல் முன்பு கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இதேபோல் புளியங்குடி அருகே உள்ள திருவட்டாநல்லூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தனது தந்தை மாடசாமி, சத்துணவு அமைப்பாளராக பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். அவருடைய வேலையை தனக்கு கருணை அடிப்படையில் வழங்கவேண்டும் என்று கூறினார்.
கடையநல்லூர் அருகே உள்ள வெள்ளைகவுண்டன்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி பாண்டி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தனது வங்கி கணக்கில் இருந்து தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் மற்றொரு கிளையில் சுய உதவிக்குழு மூலம் வாங்கிய கடனுக்கு உரிய பணத்தை எடுத்து விட்டனர். இதுபற்றி கேட்டால் வங்கி நிர்வாகம் சரியாக பதில் கூறாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 26-ந்தேதி புளியங்குடியில் உள்ள வங்கி முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார்.
கூட்டத்தில், பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 12 பேருக்கும், நெல்லை தாலுகாவை சேர்ந்த 25 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட உதவி கலெக்டர் மாறன், தாசில்தார்கள் கந்தசாமி, கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story