விவசாயிகள் சாலை மறியல் ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்


விவசாயிகள் சாலை மறியல் ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:15 AM IST (Updated: 18 Sept 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி திருவாரூர், முத்துப்பேட்டை பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 


முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அணையின் உடைப்பு சீர் செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் செல்வதால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் 650 கன அடி கொள்ளளவு கொண்ட திருவாரூர் பாண்டவையாற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது.

இதனால் பாண்டவையாற்று பாசனத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு விரைவாக தண்ணீர் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 25 நாட்களுக்கு பாண்டவையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதேபோல சம்பா பயிரை காப்பாற்ற மரைக்காகோரையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என முத்துப்பேட்டை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாண்டவையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மணலூர், கூரத்தான்குடி, கோவில் கண்ணாப்பூர், சிகார், ஆந்தகுடி, புதுப்பத்தூர், மாங்குடி, கீழ மணலி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருவாரூர் அருகே மாங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுரேந்திரன் மற்றும் திருவாரூர் தாலுகா போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொன்னபடி தண்ணீர் வழங்குவதில்லை என கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், விவசாயிகளை சமாதானம் செய்தனர். மேலும் ஓரிரு நாட்களில் கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மரைக்காகோரையாற்றில் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை அருகே தில்லை விளாகம் மரைக்காகோரையாற்று பாலத்தில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதில் தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், வாடியக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவனம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் உலகநாதன், மேலதொண்டியக்காடு விவசாய சங்க பிரதிநிதிகள் சிவானந்தம், சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்திராஜன், முத்துப்பேட்டை உதவி பொறியாளர் கிளிகண்ணன், கிராம நிர்வாக அதிகாரி சரவணன், முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை (புதன்கிழமை) மாலைக்குள் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக முத்துப்பேட்டை - வேதாரண்யம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story