சுகாதார பணிகளில் ஈடுபட அனைவரும் தாமாக முன்வர வேண்டும்


சுகாதார பணிகளில் ஈடுபட அனைவரும் தாமாக முன்வர வேண்டும்
x
தினத்தந்தி 17 Sep 2018 9:45 PM GMT (Updated: 17 Sep 2018 9:27 PM GMT)

சுகாதார பணிகளில் ஈடுபட அனைவரும் தாமாக முன்வர வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் வலியுறுத்தி உள்ளார்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை-2018’ என்ற சுகாதார விழிப்புணர்வு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தை தூய்மையான பகுதியாக மாற்றி, திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற நிலையை உறுதி செய்வதே தூய்மை சேவையின் நோக்கமாகும். அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு கூட்டம், துப்புரவு முகாம்கள் நடத்தப்படும். வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வருகிற 25 முதல் 29-ந்தேதி வரை அனைத்து அரசு அலுவலக கட்டிடங்கள், பொது இடங்களில் தீவிர துப்புரவு முகாம்கள் நடத்துவதுடன் ஊக்குவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், வருகிற 2-ந்தேதி நடைபெறும் கிராம சேவை கூட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார பணிகளில் ஈடுபட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைத்து பொதுமக்களும் தாமாக முன்வர வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக அலுவலர்கள் கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், கலெக்டர் தலைமையில் தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா மற்றும் ஊக்குவிப்பாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story