சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது; மாணவி பலி
சின்னசேலம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் மாணவி உயிரிழந்தாள். மேலும் அவளுடைய பெற்றோர் மற்றும் சகோதரன் படுகாயமடைந்தனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள வி.கிருஷ்ணாபுரம் அடுத்த சொரக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாஷா மகன் அமானுல்லா(வயது 38). இவர் கடத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாகர்பானு(30). இவர்களுடைய மகன் முகமது பர்வீன்(11), மகள் மிஸ்பா(8).
நேற்று முன்தினம் அமானுல்லா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி அருகே மூரார்பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அங்கிருந்து 4 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். நயினார்பாளையம் சாலையில் சின்னசேலம் அடுத்த பேக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளை சாலையை விட்டு கீழே இறக்கினார். அப்போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மிஸ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். படுகாயமடைந்த அமானுல்லா உள்ளிட்ட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மிஸ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மிஸ்பா சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story