காரில் கடத்திய ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - திருவண்ணாமலையை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது


காரில் கடத்திய ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - திருவண்ணாமலையை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2018 11:00 PM GMT (Updated: 17 Sep 2018 10:20 PM GMT)

பெங்களூருவில், காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை,

பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள டின்பேக்டரி வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக மகாதேவபுரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் டின்பேக்டரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையின் போது அதில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின்போது, அவர்கள் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் வேலுவணகம்பாடியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 21), கூமட்டேரியை சேர்ந்த கோவிந்தராஜூ (20), சேலம் கும்பாபாடியை சேர்ந்தவர்களான சரவணா (23), இன்னொரு கோவிந்தராஜூ (36) என்பது தெரியவந்தது.

இவர்கள், 4 பேரும் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி சென்றபோது சிக்கியதும் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story