தொழிற்சாலையில் ரூ.6 லட்சம் முந்திரி பருப்பு திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே தொழிற்சாலையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள முந்திரி பருப்புகளை திருடிய அதன் மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் முந்திரி பருப்பை பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த தொழிற்சாலையில் இருந்து முந்திரி பருப்பு திருடப்பட்டு வருவதாக அதன் உரிமையாளரான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யும்படி, தொழிற்சாலை அலுவலரான காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த துரைமுருகனுக்கு விஜய் உத்தரவிட்டார். அதன்படி துரைமுருகன் தொழிற்சாலையின் கணக்கு களை ஆய்வு செய்ததில், ரூ.6 லட்சம் மதிப்பிலான 1,200 கிலோ முந்திரி பருப்புகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து துரைமுருகன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிற்சாலையின் மேலாளர் தேனி மாவட்டம் சி.எம்.பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 34) என்பவர் சக தொழிலாளர்களான கடலூர் மாவட்டம் கீழ்இருப்பு கிராமத்தை சேர்ந்த சக்தி ஞானகுரு(26), விழுப்புரம் மாவட்டம் தடுத்தாட்கொண்டார் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(42) ஆகியோருடன் சேர்ந்து முந்திரி பருப்புகளை திருடி வெளிச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து முத்துகிருஷ்ணன், சக்தி ஞானகுரு, ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story