தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு


தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2018 11:28 PM GMT (Updated: 17 Sep 2018 11:28 PM GMT)

தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி ஆரல்வாய்மொழியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 1270 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள் ஆகும். இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழ்வழி தேர்வு எழுதி வந்தனர்.

தற்போது, தமிழ் வழியில் தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நேற்று காலையில் வகுப்புகள் தொடங்கியவுடன் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரியின் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, கல்லூரிக்கு விடுமுறை அளிப்பதாக நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளை போலீசார் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி அப்புறப்படுத்தினர்.



Next Story