பாடாலூர் அருகே பிரச்சினைக்குரிய விநாயகர் சிலையை போலீசார் எடுத்துச் சென்றதால் பொதுமக்கள் கல்வீச்சு


பாடாலூர் அருகே பிரச்சினைக்குரிய விநாயகர் சிலையை போலீசார் எடுத்துச் சென்றதால் பொதுமக்கள் கல்வீச்சு
x
தினத்தந்தி 18 Sept 2018 7:20 AM IST (Updated: 18 Sept 2018 7:20 AM IST)
t-max-icont-min-icon

பாடாலூர் அருகே பிரச்சினைக்குரிய விநாயகர் சிலையை போலீசார் எடுத்துச் சென்றதால், பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்ததால், போலீசார் தடியடி நடத்தினர்.

பாடாலூர், 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 3 பிரிவினருக்கு இடையே பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள யாரும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என பாடாலூர் போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் போலீசாரின் தடையை மீறி, அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வைக்க கடந்த 13-ந் தேதி கொண்டு வந்தனர். அப்போது விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்று போலீசார் தடுத்தனர். அதையும் மீறி பாடாலூரில் சிலையை வைத்தனர்.

இதனையடுத்து பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், விநாயகர் சிலையை வைத்த பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்சினைக்குரிய பாதையில் கொண்டு செல்லாமல், மாற்று வழியில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, வழக்கமான பாதையில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களிடம், போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் செல்லுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் சங்குபேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அன்று இரவே விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பிரச்சினைக்குரிய விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம். வழக்கமான பாதையில் தான் எடுத்துச் செல்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் 3 பிரிவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார், தாங்களே அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டத்தூர் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். இதில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைந்தது. மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் பெண் போலீசார் தங்கபானு, சூர்யா உள்பட 4 பேர் காயமடைந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 17 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காயமடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பாடாலூர் பகுதியில் நேற்று பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story