ராசிபுரம் அருகே காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி


ராசிபுரம் அருகே காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 18 Sept 2018 7:29 AM IST (Updated: 18 Sept 2018 7:29 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நகைக் கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக முத்துசாமி இருந்து வருகிறார். இவரை தவிர பணியாளர்கள், காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் கூட்டுறவு சங்கத்திற்கு விடுமுறை. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் செயலாளர் முத்துசாமி கூட்டுறவு சங்கத்திற்கு வந்து மின்விளக்கு போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த சமயத்தில் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு காவலர் சேகர் (வயது 54) பணிக்கு வந்துள்ளார். அவர் சங்க கட்டிடத்தின் அருகே ஏணி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தார். உடனே சங்க கட்டிடத்தை திறந்து உள்ளே சென்ற போது அங்கு மேற்கூரை உடைக்கப்பட்டதால் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கிடப்பதையும், லாக்கர் வைத்து உள்ள அறையின் கதவை உடைக்க கடப்பாரை சொருகப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் முத்துசாமிக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது பற்றி அறிந்ததும் முத்துசாமி சங்கத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், நாமகிரிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கூட்டுறவு சங்க செயலாளர் முத்துசாமி சங்கத்தில் விளக்கு போட்டு விட்டு சென்ற பிறகும், இரவு காவலர் பணிக்கு வருவதற்கும் இடைபட்ட நேரத்தில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்து இருப்பது தெரிய வந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கிழக்குப் புறத்தில் ஏணியை வைத்து மேலே ஏறியுள்ளனர்.

இரும்புத் தகரத்தால் மூடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள சிமெண்ட் காரைகளை கடப்பாரையால் உடைத்து கட்டிடத்திற்குள் இறங்கி உள்ளனர். உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு லாக்கர் உள்ள அறையின் கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளனர். கதவை திறக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பித்து சென்றார்களா? அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை கொள்ளையர்கள் சுவரின் மீது ஏறுவதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையர்கள் லாக்கர் வைத்துள்ள அறையை திறக்க முடியாததால் அங்கு வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் நகைகள் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி அறிந்ததும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார கள அலுவலர் வைத்திலிங்கம், அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்க கட்டிடத்தை மோப்பம் பிடித்து சுற்றி வந்தது. பிறகு ராசிபுரம்-நாமகிரிபேட்டை சாலையில் மேற்கே சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களுக்கும் கொள்ளை முயற்சியில் மர்ம ஆசாமிகளின் ரேகைகள் பதிவாகி இருக்கிறதா? என்று பதிவு செய்தனர்.

இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story