அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி உபரி தண்ணீர் வினாடிக்கு 2 ½ லட்சம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு உபரி தண்ணீர் கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழணையின் பாதுகாப்பு குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அணைக்கரை பாலம் வழியாக செல்லும் அனைத்து பஸ்கள் நிறுத்தப்பட்டன.
மேலும் இந்த வழியாக கார்கள் மற்றும் வேன்கள் மட்டுமே சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் பஸ்கள் சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், ராஜமன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மாற்று பாதை வழியாக ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் மதனத்தூர் கொள்ளிடம் வழியாக அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. அணையின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மீண்டும் அணைக்கரை பாலம் வழியாக பஸ்கள் இயக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கும்பகோணம் அரசு கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து அணைக்கரை கீழணை வழியாக பஸ் இயக்க வேண்டும். கனரக வாகனங்கள் மறைமுகமாக சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து இயக்க வேண்டும் எனவும், கல்லூரிகளுக்கு செல்ல காலதாமதமும் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார், அணைக்கரை கீழணை பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அணைக்கரை கீழணையை பார்வையிட, சென்னையில் இருந்து பாதுகாப்பு குழு இந்த வாரத்தில் வருவதாகவும், அவர்கள் பார்வையிட்ட பிறகு வருகிற 22-ந்தேதி காலை 9 மணியளவில் அணைக்கரை கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் 22-ந்தேதி பஸ் வழக்கம் போல் செல்லவில்லை என்றால் மீண்டும் நாங்கள் 24-ந்தேதி காலை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மற்றும் சென்னை-கும்பகோணம், திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story