பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக விசாரித்த அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது


பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக விசாரித்த அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2018 2:07 AM GMT (Updated: 18 Sep 2018 2:07 AM GMT)

பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக விசாரித்தபோது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், 

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் கிராமம் பெரும்பாறை பகுதியில் நேற்று முன்தினம் லாரியில் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து சென்ற 4 பேர், அதனை அங்குள்ள குழியில் கொட்டி நிரப்பியுள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் அதனை பார்த்தபோது, அதில் குளுக்கோஸ் பாட்டில் உள்ளிட்டவை கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் அந்த இடத்தை பார்வையிட்டு, சட்ட விரோதமாக கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தார். பின்னர் அவற்றை அங்கு வந்து கொட்டியது ஏன்? என அந்த 4 பேரிடமும் சென்று விசாரித்தபோது, அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி முருகேசனை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முருகேசன், வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அரவக்குறிச்சி தாலுகா குப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல், அவரது மகன் சுரேஷ்(வயது 44) ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் ஆத்தூர் நத்தமேட்டை சேர்ந்த ராஜேந்திரன், நடையனூரை சேர்ந்த லாரி டிரைவர் முத்துசாமி(33) ஆகியோர் கழிவுகளை கொட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் கொட்டியது, கிராம நிர்வாக அதிகாரியை திட்டி பணிய செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி, சுரேஷ் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய குழந்தைவேல், ராஜேந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story