கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், காரையூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், காரையூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Sep 2018 2:11 AM GMT (Updated: 18 Sep 2018 2:11 AM GMT)

போலீஸ் பாதுகாப்புடன் கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், காரையூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பழைய பஸ்நிலையம், அக்கச்சிப்பட்டி, கோவிலூர் கீழத்தெரு, வளவம்பட்டி, பெரியகடை வீதி ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து தினமும் விநாயகரை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இதையடுத்து விநாயகர் சிலைகள் அனைத்தும், ஊர்வலமாக அக்கச்சிபட்டி வடுகச்சி அம்மன் கோவில் முன்பு வந்து சேர்ந்தது.

இதையடுத்து அங்கிருந்து விநாயகர் சிலைகள், பட்டுக்கோட்டை சாலை, மாரியம்மன்கோவில் தெரு, செட்டியார் தெரு, பெரியகடை வீதி, மெயின் ரோடு, திருச்சி சாலை, யாதவர் தெரு, கோவிலூர் தெரு வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கந்தர்வகோட்டை சிவன் கோவில் அருகில் உள்ள சங்கூரணி குளத்தில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே பூங்குடி கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதையடுத்து விநாயகர் சிலை ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஆவுடையார்கோவில் முக்கியவீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆத்மநாதசுவாமி கோவில் முன்பு உள்ள நெல்லியடி ஊரணியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

அதே போல் காரையூர் அருகே உள்ள சடையம்பட்டியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் விநாயகருக்கு மூன்று கால பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பத்திரகாளி அம்மன் கோவிலிலிருந்து விநாயகர் சிலை அண்ணா நகர், படுதினிப்பட்டி, கீழக்களம், சொரியம்பட்டி, மறவாமதுரை, கங்காணிப்பட்டி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாவிதன் ஊரணியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story