நெரூர் தென்பாகம் ஊராட்சி பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார்கள் திருட்டு
நெரூர் தென்பாகம் ஊராட்சி பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார்கள் திருட்டு போனதால் குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை. இதனால் அவதியடைந்த மக்கள் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்த கோரிக்கைகள் என மொத்தம் 327 மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார்.
பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கரூர் அருகே ஆண்டாங்கோவில் மேற்கு ஆத்தூர் பிரிவு அம்மன் நகர், ஜே.கே.நகரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது கலங்கலாக வினியோகிக்கப்பட்ட குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து கலெக்டரிடம் காண்பித்து முறையிட்டனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம். அத்தியாவசிய தேவைக்காக சில கிலோ மீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் பிடித்து வரமுடிகிறது.
எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியிலுள்ள சாலை நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உருமாறிவிடுவதால் பஸ்கள் உள்ளிட்டவை ஊருக்குள் வரமுடியாத சூழல் இருக்கிறது. எனவே புதிதாக சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நெரூர் தென்பாக ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், பெறமாயி அம்மன்கோவில் தெரு, ஆர்.சி.தெரு, என்.புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பிரதான நுழைவு வாயிலில் வைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி 5 பேரை மட்டும் மனுகொடுக்க செல்லுமாறு போலீசார் உள்ளே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எங்கள் தெருக்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார்கள் திருட்டு போய்விட்டன. சில குடிநீர் தொட்டிகளும் காணாமல் போய்விட்டன. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் தெருவிளக்கு, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாநில பொது செயலாளர் கருப்பையா, ஒருங்கிணைப்பாளர் தலித் பாண்டியன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், கரூர், க.பரமத்தி ஆகிய இடங்களில் மாணவர்கள் 2 பேர் தற்கொலை செய்தது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தியதன் பேரில் அவர்களது குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். லாலாபோட்டை கொடிக்கால் தெருவில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர் லாலாபேட்டை நாகராஜன் மனு கொடுத்தார். கிருஷ்ணராயபுரம் தாலுகா குறிக்காரன்பட்டியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் மாணிக்கம் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு நவீன செயற்கை காலையும், வருவாய் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.48,000 மதிப்பில் நலிவுற்ற கலைஞர்களுக்கான உதவித்தொகையும் கலெக்டர் அன்பழகன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story