சுரண்டை அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை


சுரண்டை அருகே இளம்பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Sept 2018 3:00 AM IST (Updated: 18 Sept 2018 4:33 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே இளம்பெண் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரண்டை, 

சுரண்டை அருகே இளம்பெண் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி டிரைவரின் மனைவி 

சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). லாரி டிரைவர். இவருக்கும், வீரசிகாமணி வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் மகள் சாந்தி (27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மற்றும் இரண்டு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்த் வேலை காரணமாக வெளியூர்களுக்கு சென்று விட்டு வாரம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாராம். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

மர்ம சாவு 

நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாந்தி தனது தந்தையிடம் செல்போனில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சாந்தி உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை 

தகவல் அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தியின் தந்தை வேல்முருகன் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக கொடுத்த புகாரின் பேரில், சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாந்திக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story