லாரியின் சக்கரத்தில் சிக்கி பட்டதாரி பெண் பலி கோவில்பட்டியில் பரிதாபம்
கோவில்பட்டியில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டதாரி பெண்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை அடுத்த தூங்காரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் வைரபாகு. விவசாயி. இவருடைய மகள் கன்னியம்மாள் (வயது 21). இவர் பி.எஸ்சி. படித்து விட்டு, வேலை தேடி வந்தார். இவர் தனியார் நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக, நேற்று காலையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் கணினி மையத்துக்கு வந்தார். பின்னர் அவர் மதியம் தனது ஊருக்கு திரும்பி செல்வதற்காக, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே எலுமிச்சங்காய்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் மருதராஜ் (21) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து...
மருதராஜிம், கன்னியம்மாளும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். எனவே கன்னியம்மாளிடம் நலம் விசாரித்த மருதராஜ், பின்னர் கன்னியம்மாளை அவரது வீட்டில் சென்று விடுவதாக கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
கோவில்பட்டி மெயின் ரோடு லட்சுமி மில் மேம்பாலம் வழியாக சென்றபோது, முன்னால் சென்ற லாரியை மருதராஜ் முந்திச் செல்ல முயன்றார். மேம்பாலத்தின் நடுவில் வளைவான பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
உடல் நசுங்கி...
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கன்னியம்மாளின் வயிற்றில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். சாலையோரம் தூக்கி வீசப்பட்ட மருதராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான வல்லநாடு கலியாவூரைச் சேர்ந்த கல்யாணி மகன் முத்துபட்டனை (29) கைது செய்தார்.
நெல்லையில் இருந்து தார் லோடு ஏற்றிய லாரி, அதனை எட்டயபுரத்தில் இறக்கி விட்டு, நெல்லைக்கு திரும்பி சென்றபோது விபத்து நிகழ்ந்தது. லாரியின் சக்கரத்தில் சிக்கி பட்டதாரி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story