நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை: அரசு பள்ளிக்கூடம் முற்றுகை


நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை: அரசு பள்ளிக்கூடம் முற்றுகை
x
தினத்தந்தி 19 Sept 2018 4:45 AM IST (Updated: 19 Sept 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டார்கள். ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன்பாளையத்தில் அரசு மாதிரி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். 25 ஆசிரிய–ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள்.

இந்த பள்ளிக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 16–ந் தேதி அந்த மாணவி திடீரென வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவருடைய பெற்றோர் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவியை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த மாணவி இறந்துவிட்டார்.

இந்தநிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று காலை திரண்டுவந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டார்கள். உடனே தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி மற்றும் கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிகாரிகளிடம், ‘பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சண்முகம் என்பவர் தற்கொலை செய்துகொண்ட மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். அதனால்தான் மாணவி அந்த முடிவுக்கு சென்றுள்ளார். எனவே அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்கள். அதற்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இதற்கிடையே புகார் கூறப்பட்ட ஆசிரியர் சண்முகத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story