முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்


முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 7:49 PM GMT)

செங்கோட்டை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை, 


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் நயினார் முகமது தலைமையில், கிழக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், நிர்வாகிகள் அலிப் பிலால், ஆரிப், சுல்தான், மீரான், நிஜாம், அகமது ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர் பகுதியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உறவினர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். செங்கோட்டை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் நடந்து வருகிறது. இந்த ஊர்வலம் சில இந்து அமைப்பு சார்பில் நடக்கிறது.

இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் செங்கோட்டையில் நடந்தது. அப்போது பம்ப் ஹவுஸ் பகுதியில் வந்த போது, ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆபாசமாக பேசி உள்ளனர். அப்போது நடந்த கலவரத்தில் முஸ்லிம்களின் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.

சில அமைப்பின் தூண்டுதலின் பேரில் இந்த கலவரம் நடந்தது. ஆனால் செங்கோட்டை போலீசார் எங்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் முகமது ஆரிப், உமர், முகமது இஸ்மாயில், உமர் கத்தாப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தேடுதல் வேட்டை என கூறி வீடுகளுக்குள் நுழைந்து அங்கு இருக்கும் இளைஞர்களை அழைத்து வந்து பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள். எனவே செங்கோட்டை கலவரத்தின் போது முஸ்லிம்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். காவல்துறையை கட்டுப்படுத்தி, கலவரத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story