கூடுதல் கட்டணத்தால் பயணிகள் ஆர்வம் இல்லை: அரசு சொகுசு பஸ் நஷ்டத்தில் இயங்கும் நிலை
சிவகாசியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு சொகுசு பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் அந்த பஸ்சில் பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் அந்த பஸ் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. இதை தவிர்க்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 7½ மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சொகுசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதி கொண்ட இந்த பஸ்சில் ஒரு நபருக்கு ரூ.1,140 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சொகுசு பஸ்சை 2 மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் இந்தபஸ்சில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய பயணிகள் தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி அரசு சொகுசு பஸ்சை புறக்கணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகாசியில் இருந்து 10–க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பஸ்களில் கட்டணமாக ரூ.750 முதல் ரூ.900 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வதை விட தனியார் பஸ்களில் பயணம் செய்தால் பயண செலவு குறைவு என்று கருதி பயணிகள் தற்போது அரசு போக்குவரத்து சொகுசு பஸ்சில் பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் தினமும் இரவு 7½ மணிக்கு சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து இந்த சொகுசு பஸ் பயணிகளே இல்லாமல் காலி பஸ்சாக புறப்பட்டுச் செல்கிறது.
மதுரைவரை காலியாக சென்று அங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றிக் கொண்டு சென்னை செல்கிறது. இவ்வாறு தொடர்ந்து பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருவதால் போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்த சொகுசு பஸ்சை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது.
தொகுதி மக்களுக்கு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பெரும் முயற்சியால் இந்த பஸ் சிவகாசியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டண உயர்வால் பயணிகள் இந்த பஸ்சை புறக்கணித்து வருவதால் மிக விரைவில் இந்த பஸ் இயக்கப்படாமல் நிறுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்தபஸ் தொடர்ந்து இயக்க சொகுசு பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.
அதே போல் சிவகாசியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மாலை 6½ மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் சிவகாசியில் இருந்து புறப்படாமல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் இந்த பஸ் சிவகாசிக்கு தாமதமாக வருகிறது.
சிவகாசியில் இருந்து செல்ல விரும்பும் பயணிகள் பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 6½ மணிக்கு வர வேண்டிய பஸ் தற்போது 7½ மணிக்கு வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து தாமதமாக இந்த பஸ் வருவதால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ்சை சரியான நேரத்தில் இயக்க தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.