சீருடை பணியாளர்களுக்கு உடல் திறன் தேர்வு: 182 பெண்கள் தகுதி பெற்றனர்
விழுப்புரத்தில் சீருடை பணியாளர் உடல்திறன் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 182 பெண்கள் தகுதி பெற்றனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 810 பெண்கள் உள்பட 3,343 பேருக்கு உடல் தகுதித்தேர்வு விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல்கட்டமாக நடந்த உடல்தகுதித் தேர்வில் ஆண்களில் 1,691 பேரும், பெண்களில் 419 பேரும் அடுத்த நிலையான உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக நடந்த உடல்திறன் தேர்வில் 1,422 ஆண்கள் தகுதி பெற்றனர். இவர்களை தொடர்ந்து உடல் தகுதித்தேர்வில் தகுதி பெற்ற விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று உடல்திறன் தேர்வு நடந்தது.
இதில் உடல் தகுதித்தேர்வில் தகுதி பெற்ற 419 பெண்களுக்கும் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் 6 பேர் வரவில்லை. மீதமுள்ள 413 பேருக்கு நீளம் தாண்டுதல் நடந்தது. இதில் நீளம் தாண்ட முடியாமல் 101 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 312 பேர் நீளம் தாண்டி தங்கள் திறமையை நிரூபித்தனர்.
இவர்களுக்கு அவரவர் விருப்பப்படி குண்டு எறிதல் அல்லது கிரிக்கெட் பந்து எறிதல் நடந்தது. இதில் குண்டு எறிதலில் 55 பேர் பங்கேற்றதில் 2 பேர் குறிப்பிட்ட தூரம் குண்டு எறிய முடியாமல் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் கிரிக்கெட் பந்து எறிதலில் 257 பேர் பங்கேற்றதில் 18 பேர் வெளியேற்றப்பட்டனர்.இதில் தகுதி பெற்ற 292 பேருக்கு 100 மீட்டர் ஓட்டம் அல்லது 200 மீட்டர் ஓட்டம் அவரவர் விருப்பப்படி நடந்தது. அதாவது 100 மீட்டர் ஓட்டத்தில் 17.50 நொடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தில் 38 நொடிகளிலும் இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 182 பேர் இலக்கை அடைந்தனர். இலக்கை அடைய முடியாமல் 110 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆக மொத்தத்தில் பெண்களுக்கான உடல்திறன் தேர்வில் 182 பேர் தகுதி பெற்றனர
நேற்று நடந்த உடல் திறன் தேர்வில் தகுதி பெற்ற 182 பெண்கள் மற்றும், ஏற்கனவே நடந்த உடல்திறன் தேர்வில் தகுதி பெற்ற 1,422 ஆண்களுக்கும் இன்று (புதன்கிழமை) சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
Related Tags :
Next Story