பழனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாவட்ட நிர்வாகி மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி பழனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நூருல்ஹூதா என்ற பகத்சிங். இவர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அவரை கைது செய்ய பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி அவரை பழனி நகர் போலீசார் கைது செய்தனர். 3 நாட்கள் சிறையில் இருந்த அவர், கோர்ட்டு மூலம் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் பகத்சிங் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவரை கைது செய்ய உத்தரவிட்ட சப்-கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 10 மணி அளவில் பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
சப்-கலெக்டர் அலுவலகத்துக்குள் மாற்றுத்திறனாளிகள் நுழையாத வகையில், போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ரெணகாளியம்மன் கோவில், குளத்துரோடு பை-பாஸ் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாசில்தார் சரவணகுமார், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே மாவட்ட வருவாய் அலுவலர் வேலு சுமார் 5 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் அவர், அதிகாரிகளுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பகத்சிங் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெற்று கொள்ளப்படும். மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசு வக்கீல்கள் மூலம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அத்துடன் மாற்றுத்திறனாளிக்கு வழங்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் குறித்து வருகிற 24-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேசி முடிவு எடுக்கப்படும், என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் பழனி பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
Related Tags :
Next Story