ஒரே மண்டலில் விநாயகரையும், முகரம் சவாரியையும் அமைத்து வழிபடும் மக்கள்
மத நல்லிணக்கத்திற்காக ஒரே மண்டலில் விநாயகரையும், முகரம் சவாரியையும் அமைத்து மக்கள் வழிபடும் ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
யவத்மால்,
கடந்த 2008-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற மத கலவரத்தின்போது இந்த மாவட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மொத்த மாவட்டத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கு முன்னோடியாக இங்குள்ள ஒரு கிராமம் மாறியுள்ளது.
முஸ்லிம்களின் முக்கிய மாதமான முகரம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் முஸ்லிம்கள், கை, நிலா, வால் போன்ற உருவங்கள் அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்று வழிபடுவது வழக்கம். இதை “முகரம் சவாரி” என்று அழைக்கின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியும் இதே மாதத்தில் வந்துள்ளது.
இந்த நிலையில் யவத்மால் மாவட்டம் உமர்காந்த் தாலுகாவில் விதுல் கிராமத்தை சேர்ந்த போலீசார், இரு விழாக்களையும் அமைதியான முறையில் கொண்டாட வலியுறுத்தும் வகையில், 2 சமுதாய தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது, அவர்கள் ஒரே மண்டலில் விநாயகர் மற்றும் முகரம் சவாரியை அமைத்து வழிபடுவது என தீர்மானித்தனர்.
இதன்படி ஒரே மண்டலில் விநாயகர் சிலையும், முகரம் சவாரியும் அமைத்து ஒற்றுமையுடன் வழிபட்டு வருகின்றனர்.
இவர்களின் மத நல்லிணக்க செயல்பாடு மொத்த மாவட்டத்திற்கும் முன் உதாரணமாக அமைத்துள்ளது.
இதுகுறித்து மண்டலை அமைத்துள்ள கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-நாங்கள் இங்கு கடந்த 134 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி வழாவை கொண்டாடி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தான் இரு மத விழாக்களும் ஒன்றாக வருகின்றன. எனவே நாங்களும் அதை ஒன்றாக கொண்டாட முடிவு செய்தோம். நாங்கள் முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் இந்த விழாவை கொண்டாடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.