தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு: தொழில் அதிபரின் மகன் கைது


தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு: தொழில் அதிபரின் மகன் கைது
x
தினத்தந்தி 19 Sept 2018 5:00 AM IST (Updated: 19 Sept 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் தொழில் அதிபரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெரியார் திடலில் பெரியார் சிலை அமைந்துள்ளது. பெரியார் பிறந்தநாளையொட்டி கடந்த 16-ந் தேதி இரவு 11.30 மணி வரை திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை சுத்தம் செய்து விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் சிலர் பெரியார் திடலுக்கு சென்று பார்த்தபோது, பெரியார் சிலையின் தலைக்கு மேல் 2 செருப்புகள், ஒரு செங்கல் வைக்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தனர்.

இதுகுறித்து உடனடியாக தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செருப்புகள், செங்கல் ஆகியவற்றை அப்புறப்படுத்தினார்கள். மேலும் சிலையின் தலைப்பகுதி கல்லால் தாக்கி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் மறியல் செய்ய திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் பெரியார் பிறந்தநாளையொட்டி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சண்முகம் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தனிப்படை போலீசார் தாராபுரம்-உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கி ஓடினார். போலீசார் அவரை துரத்திப்பிடித்தனர்.

விசாரணையில் அவர் தாராபுரம் தளவாய்பட்டிணம் அருகே உள்ள சிக்கினாபுரம் கணபதிதோட்டத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் நவீன்குமார்(வயது 28) என்பதும், பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தொழில் அதிபரான கந்தசாமி அந்த பகுதியில் செங்கல் தயாரிக்கும் சேம்பர் வைத்துள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான நவீன்குமார் தந்தைக்கு துணையாக செங்கல் சேம்பரை கவனித்து வந்துள்ளார். பெரியாரை, ‘தந்தை பெரியார்’ என்று அழைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வந்ததாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் பெரியார் பிறந்தநாளன்று பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததாகவும் நவீன்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. விளம்பர பலகைகளையும் சேதப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நவீன்குமாரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தாராபுரத்தில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். 

Next Story