எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்


எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2018 5:10 AM IST (Updated: 19 Sept 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் பணி புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு எச்.ராஜாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் மதியத்திற்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாரதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பின்னர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாரதி நிருபர்களிடம் கூறுகையில், “வருகிற 27-ந் தேதி சென்னையில், எச்.ராஜாவை கண்டித்து தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும்” என்றார்.

இதேபோல அறந்தாங்கியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்திலும் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story