மொபட்- டிராக்டர் மோதி விபத்து: ‘லிப்ட்’ கேட்டு சென்ற விவசாயி சாவு
வாணாபுரம் அருகே டிராக்டர் மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற விவசாயி பலியானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதியவரும் இறந்ததால் சோகம் ஏற்பட்டது.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70) விவசாயி. இவர் வாழவச்சனூர் கிராமத்திற்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த ரங்கராயர் மகன் தமிழ்ச்செல்வன் (18) மொபட்டில் வந்தார். அவரிடம் லிப்ட் கேட்டு மொபட்டில் அமர்ந்து சென்றார்.
உண்ணாமலைபாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது மொபட் மோதியது. இதில் கீழே விழுந்த ஏழுமலை படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தமிழ்ச்செல்வன் லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஏழுமலையின் உடல் சதாகுப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த முருகேசன் (70) என்பவர் ஏழுமலை உடலுக்கு நேற்று பிற்பகல், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றபோது முருகேசன் இறந்தது தெரியவந்தது.
விபத்தில் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நின்றவரும் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story