தமிழக பகுதியில் பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைத்து புதுச்சேரிக்கு ஒதுக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
தென்பெண்ணையாற்றில் தமிழக பகுதியில் மணல் குவாரி அமைத்து புதுச்சேரிக்கு ஒதுக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
பெங்களூர்,
28–வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கர்நாடக மாநில முதல் மந்திரி குமாரசாமி, புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
புதுவை மாநிலத்தில் மணல் தட்டுப்பாடு பிரச்சினை உள்ளது. புதுவை மாநிலத்துக்கு தேவையான மணல் எங்களிடம் இல்லை. இதனால் பக்கத்து மாநிலமான தமிழகத்தை நம்பியே நாங்கள் உள்ளோம். தென்பெண்ணையாற்றில் புதுவை அரசு சார்பில் பல இடங்களில் படுகை அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தமிழகம், புதுவை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
எனவே பெண்ணையாற்றில் தமிழக பகுதியில் மணல் குவாரி அமைத்து அதை புதுவை மாநில மாநிலத்துக்கு வழங்கவேண்டும். மேலும் தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மணல் எடுத்துவர சட்டப்படி இயலாது.
மணல் கிடைக்காததால் புதுவையில் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கிப்போய்விட்டன. பலர் வேலையிழந்து உள்ளனர். இதனால் வேலையில்லா பிரச்சினைகள் எழுந்துள்ளது. எனவே மணல் இறக்குமதி செய்ய புதுவை அரசு புதிய விதிகளை உருவாக்கி உள்ளது. இதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.
புதுவையில் 2 துறைமுகங்கள் உள்ளன. புதுவை துறைமுகம் கடலில் மணல்வாரும் பணி முடிந்ததும் செயல்பாட்டிற்கு வரும். அதேநேரத்தில் காரைக்கால் துறைமுகம் மணல் இறக்குமதிக்கு தயாராக உள்ளது.
புதுவை மக்களுக்கு தேவையான தண்ணீரை வீடுர் அணையில் இருந்து கடந்த கால ஒப்பந்தங்களின்படி தவறாமல் திறந்துவிட வேண்டும். புதுவையில் வாதானூர் கிராமம் மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் எல்லைப்பிரச்சினைகள் உள்ளன. இவை தீர்க்கப்பட வேண்டும்.
காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க சுப்ரீம் கேர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காரைக்காலில் அரசாலாறு, வாஞ்சியாறு, நண்டலாறு என 7 ஆறுகள் உள்ளன. ஏனெனில் காரைக்கால் மாவட்டம் குடிநீர், வேளாண்மை, தொழிற்சாலை தேவைகளுக்கு இந்த ஆறுகளையே நம்பியுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காரைக்காலுக்கு கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் உரிய தண்ணீரை வழங்கவேண்டும்.
புதுவை மாநிலம் தற்போது பல்வேறு நிதி பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நிதிக்குழுவிலும் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. தனிக்கணக்கு தொடங்கியபின் வெளிநாட்டில் கடன்பெற்று வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரியில் புதுச்சேரி ஒரு மாநிலமாக கணக்கிடப்படுகிறது. அதேபோல் 15–வது நிதிக்குழுவிலும் புதுச்சேரியை மாநிலமாக கருதி சேர்க்கவேண்டும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.