பெங்களூருவில் தென்மண்டல முதல்மந்திரிகள் மாநாடு


பெங்களூருவில் தென்மண்டல முதல்மந்திரிகள் மாநாடு
x
தினத்தந்தி 19 Sept 2018 5:55 AM IST (Updated: 19 Sept 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தென்மண்டல முதல்மந்திரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீர் வழங்கும் பிரச்சினைக்கு இந்த மாநாட்டில்  தீர்வு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு,

மத்திய உள்துறை சார்பில் 28வது தென்மண்டல முதல்மந்திரிகள் குழு மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி, தமிழக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர், ஆந்திரா, கேரள நிதி மந்்திரிகள், அந்தமான்நிக்கோபார் தீவுகளின் கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளை சேர்ந்த மத்தியமாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 3.45 மணி வரை 3¼ மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு மத்திய அரசின் உள்துறை அமைச்சக உயர் அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற தென்மண்டல முதல்மந்திரிகள் மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மீனவர்கள் பாதுகாப்பு உள்பட 27 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை வழங்குதல் உள்பட 22 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தென்இந்தியாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த முறை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த தென்மண்டல முதல்மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.

இதில், மீனவர்கள் பாதுகாப்பு, தீபகற்ப சுற்றுலா ெரயில்களை அறிமுகம் செய்வது, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவமாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் ஒரே சீராக நிதி ஒதுக்குவது, புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வது உள்பட பல்வேறு முடிவுகள் அமல்படுத்தப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

மீன்பிடி உரிமை தொடர்பாக புலிகாட் ஏரி விவகாரத்தில் ஆந்திராதமிழ்நாடு இடையே இருக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

சேஷசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல், மீன் வளர்ப்புகளுக்கு உயிர்கொல்லி மருந்துகள் விநியோகம் செய்தல், இறால் ஏற்றுமதி, மாநில போலீஸ் துறைகளை நவீனப்படுத்த தேவையான திட்டத்தை அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

சமையல் எரிவாயு கிடங்குகளுக்கு தடையில்லா சான்றிதழ்கள் வழங்குதல், உயிரி எரிபொருள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்கும் தீர்வு காணப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு இந்த தென்மண்டல கவுன்சிலின் நிலைக்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் திருவனந்தபுரம்மங்களூரு இடையே அதிவேக ரெயில் பாதை அமைப்பது, தொழில் வரி மீதான உச்சவரம்பை மாற்றி அபை்பது, மாநிலங்களிடையே வன விலங்குகள் நடமாட்டம், புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்ப்பது, புதுச்சேரி மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த கூட்டாட்சி தத்துவ நடைமுறையில் நடைபெற்ற முதல்மந்திரிகள் மாநாட்டில் விவாதங்கள் அன்பாகவும், சுமூகமாகவும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த தென்மண்டல முதல்மந்திரிகள் குழுவின் அடுத்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தென்மண்டல கவுன்சிலை போல் நாட்டில் மொத்தம் 5 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் இதுவரை 600 அம்சங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுவரை இதில் 406 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டையொட்டி விதான சவுதாவில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விதான சவுதாவை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விதான சவுதாவுக்குள் சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். வழக்கத்திற்கு மாறாக அங்கு போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. 

Next Story