மானூர் குளத்தின் கால்வாயை தூர்வார வேண்டும் கலெக்டரிடம், லட்சுமணன் எம்.எல்.ஏ. மனு
மானூர் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்யை தூர்வார வேண்டும் என்று கலெக்டரிடம் ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
நெல்லை,
மானூர் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயை தூர்வார வேண்டும் என்று கலெக்டரிடம் ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
கலெக்டரிடம் மனு
நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ். லட்சுமணன், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பி இருந்து வருகிறார்கள். மானூர் பெரியகுளம், பள்ளமடை குளம் ஆகிய 2 குளங்களுக்கும் சிற்றாறு கால்வாய் பாசனத்தில் உள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போது மானூர் பெரியகுளத்திற்கும், பள்ளமடை குளத்திற்கும் தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் இந்த குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய பிரதான கால்வாய் தூர்வாரப்படாமலும், குளம் மராமத்து பணி செய்யாமல் உள்ளதாலும் தான் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. எனவே இந்த குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயை தூர்வாரவேண்டும்.
பாலம் கட்டும் பணி
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் அருகில் உள்ள பாலம் சீரமைக்கும் பணி, புதிய பாலம் கட்டும் பணி ஆகியவற்றை நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா, தசரா திருவிழா, தாமிரபரணி புஷ்கர விழா ஆகியவை முடிந்த பிறகு தொடங்க வேண்டும்.
நெல்லை அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்த சாகுல்அமீது துபாய் நாட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story