முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. கண்டனம்
முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி பற்றி சர்சைக்குரிய முறையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி பற்றி சர்சைக்குரிய முறையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கண்டனம்
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காவலனாக, தமிழினத்தின் தலைவராக, தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக, சுயமரியாதைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த தலைவர் கலைஞர் கருணாநிதி. அவர் தனது 95–வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கி நாங்கள் பிச்சை போட்டோம் என்று அநாகரீகமாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. கண்டனத்தை தெரிவிக்கிறது.
தனது 14 வயதில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. அன்று முதல் இறுதி மூச்சுவரை தமிழ் சமுதாயத்துக்காக வாழ்ந்தவர் தலைவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை மக்களின் பாதுகாப்புக்காக, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காக சமரசம் இல்லாமல் போராடி வெற்றி பெற்றவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற மகத்தான கொள்கையை உருவாக்கியவர்.
கோர்ட்டு உத்தரவு
இப்படி பல சிறப்புகளை பெற்ற தலைவருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. சென்னை ஐகோர்ட்டு கலைஞரின் சிறப்பை அங்கீகரித்து மெரினாவில் இடம் ஒதுக்கித்தர உத்தரவு பிறப்பித்தது.
உண்மை இவ்வாறிருக்க, அரசியலும், வரலாறும் தெரியாமல் அமைச்சர் என்ற அந்தஸ்தை மறந்து அருகதையற்ற முறையில், எல்லையை மீறி வாய்க்கு வந்தபடி பேசுவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிறுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அவதூறை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், என்பதோடு எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story