மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி,
புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவகுருநாதன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ராஜ்கிரண்(24), ராஜ்குமார்(25) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பெரியபட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜ்கிரண் ஓட்டினார்.
ஆலப்பாக்கம் அருகில் வந்த போது ராஜ்கிரண் திடீரென பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சிவகுருநாதன் உள்ளிட்ட 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகுருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்கிரண், ராஜ்குமார் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.