அத்தையை அடித்துக்கொன்ற வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை


அத்தையை அடித்துக்கொன்ற வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 19 Sep 2018 9:45 PM GMT (Updated: 19 Sep 2018 11:47 PM GMT)

காட்பாடி அருகே குடும்ப தகராறில் அத்தையை அடித்துக்கொன்ற வழக்கில் வேலூர் கோர்ட்டில் வாலிபருக்கு ஆயுள்தண்டனையும், அவருடைய தம்பிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்குப்பற்றிய விவரம் வருமாறு:-

வேலூர், 


காட்பாடியை அடுத்த கீரைசாத்து கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவருடைய தங்கைகள் நாகம்மாள், மாணிக்கம்மாள். இவர்களில் நாகம்மாள், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரைவிட்டு பிரிந்து கீரைசாத்து கிராமத்தில் வசித்து வந்தார். மாணிக்கம்மாளின் மகள் கோகிலாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி தாலி பிரித்துக்கட்டும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

வரதனின் தம்பியான மோகன்பாபு, கோகிலாவை தனது சகோதரியான நாகம்மாள் வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு வைத்து நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் கோகிலாவும், அவருடைய கணவரும் வெளியே சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து அதே கிராமத்தில் வசிக்கும் வரதனின் மகன்கள் ஜெகதீஸ்வரன் (வயது 35), பத்மநாபன் (28) ஆகிய இருவரும் நாகம்மாள் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் எங்களுக்கு சீர்வரிசை செய்யாமல் எப்படி கோகிலாவுக்கு தாலியை பிரித்து கட்டலாம் என்று கேட்டு நாகம்மாளுடன் தகராறு செய்துள்ளனர். அவர்களை மோகன்பாபு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் அவர்களால் நாகம்மாளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அவரை மோகன்பாபு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

இதை அறிந்த ஜெகதீஸ்வரனும், அவருடைய தம்பி பத்மநாபனும் அன்று மாலை மோகன்பாபு வீட்டுக்கு சென்றனர். உடனே மோகன்பாபு தனது வீட்டின் முன்பக்க கதவை பூட்டினார். ஆனாலும் அவர்கள் பின்பக்க வாசல்வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த நாகம்மாளை, ஜெகதீஸ்வரன் விறகு கட்டையால் தலையில் தாக்கினார். பத்மநாபன் கையால் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த நாகம்மாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரன், அவருடைய தம்பி பத்மநாபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் வேலூர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் இந்த வழக்குவிசாரணை நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை இந்த வழக்கில் ஆஜரானார்.

நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். ஜெகதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், பத்மநாபனுக்கு 5 ஆண்டு ஜெயில்தண்டனையும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார். மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

Next Story