மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தனூர் அணையில் மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மரபுசார் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையில் சாத்தனூர், வேப்பூர்சிக்கடி, மேல்பாச்சார், கீழ்பாச்சார், ரெட்டியார்பாளையம், தானிப்பாடி, அரட்டவாடி, தாழையூத்து போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் மீன் பிடித்து வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அணையில் மீன்பிடிப்பதை சிலர் தடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று அறிவித்தபடி மீன்பிடி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலெக்டரை சந்திக்க வேண்டும் என கூறினர். அப்போது அவர்களில் ஒரு சிலரை மட்டுமே சந்திக்க அனுமதிக்க முடியும் என போலீசார் கூறினர். இதனையடுத்து சங்க பிரதிநிதிகள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்தனர். அவரிடம் சாத்தனூர் அணை மரபுசார் மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக சாத்தனூர் அணையில் மீன் பிடித்து வருகிறோம். நாங்கள் இதுவரை தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறையில் கட்டணம் செலுத்தி மீன் பிடித்தோம். சமீப காலமாக தனியார் ஏலம் எடுத்த பிறகு அவர்கள் எங்களை மீன்பிடிக்க அனுமதிக்க மறுக்கின்றனர். அவர்கள் அடியாட்களை வைத்து விரட்டுகின்றனர்.
ஆடு மேய்ப்பதற்காக பெண்கள் ஆடுகளுடன் ஆற்றங்கரையோரம் சென்றால் அவர்களையும் விரட்டுகின்றனர். எனவே சாத்தனூர் அணையில் மீன்பிடி உரிமையை தனியாருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி உத்தரவாதம் செய்வதுடன், சாத்தனூர் அணை மீனவர் பங்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆகும் உரிமையை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story