ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ‘திடீர்’ சாவு
கண்ணமங்கலம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் திடீர் மாரடைப்பில் இறந்து விட்டார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் சசிகுமார்நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி போலீசார் நடத்திய சோதனையில் ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கோகுலன் (வயது 29), அரிராஜா (26), திருமலை (27), தினேஷ் (24) ஆகிய 4 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் கீழ்வல்லத்தை சேர்ந்த சக்திவேல் (37), களம்பூரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சிலம்பு (23) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சக்திவேல் கடந்த 17-ந் தேதி வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள மராட்டிபாளையம் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கீழ்வல்லம் கிராமத்தில் உள்ள சக்திவேல் மனைவி சங்கீதா மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சக்திவேலின் குடும்பத்தினர் ஒடுகத்தூர் சென்று அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து, கீழ்வல்லம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் சக்திவேல் இறந்து விட்டதால், மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் நடத்தும் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சக்திவேலுடன் தலைமறைவான சிலம்புவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story