ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
தஞ்சை அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-வெள்ளிபொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆசிரியர் காலனி விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் திரனேந்திரன்(வயது40). இவர் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. இவர் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
திரனேந்திரன் தாய் தஞ்சை காசவளநாடுபுதூரில் வசித்து வந்தார். அவர் சம்பவத்தன்று இறந்து விட்டார். இதையடுத்து திரனேந்திரன் குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்று விட்டனர். நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ¾ கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை-வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து திரனேந்திரன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story