திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் சாவு
தஞ்சையில், திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில்வே காலனியில் வசித்து வருபவர் பாலு. இவரது மகள் சிவரஞ்சனி(வயது 20). இவருக்கும், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தர்மகுடிக்காடு பகுதியை சேர்ந்த ராஜவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி 3 மாதம் கணவருடன் வசித்த சிவரஞ்சனி, பின்னர் தஞ்சை ரெயில்வே காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவரஞ்சனி விஷம் குடித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை நகர தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 6 மாதத்தில் சிவரஞ்சனி இறந்து விட்டதால் அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தஞ்சை உதவி கலெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story