மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் 2 மாதங்களில் 13 பிணங்கள் மீட்பு


மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் 2 மாதங்களில் 13 பிணங்கள் மீட்பு
x
தினத்தந்தி 20 Sept 2018 3:30 AM IST (Updated: 20 Sept 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடந்த 2 மாதங்களில் 13 பிணங்கள் மீட்கப்பட்டு உள்ளன. எனவே நீர்நிலைகளில் ஆபத்தான முறையில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,


தேனி மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டுகின்றனர். நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிக்க வேண்டாம் என்று போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு சென்று அடையவில்லை என்றே தெரிகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில், முல்லைப் பெரியாறு, வைகை, கொட்டக்குடி ஆகிய ஆறுகளில் ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி, க.விலக்கு ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பலர் குளிப்பதற்காக ஆற்று பகுதிக்கு செல்லும் போது விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். நன்கு நீச்சல் தெரிந்தவர்களும் இந்த விபத்தில் தப்பவில்லை.

உப்புக்கோட்டை அருகே 2 நபர்கள் குடிபோதையில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு அதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள கண்மாயில் விளையாடிய 3 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கோம்பை புதுக்குளம் கண்மாயில் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிக்கச் சென்று இதுபோன்ற அசம்பாவிதம் நிகழாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரியாத பட்சத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் அணை பகுதிகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் தனியாக நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதை தவிர்க்க வேண்டும். நீச்சல் தெரிந்த நபர்களோடு குழுவாக நீர்நிலைகளுக்கு செல்வது நலம். புதைமணல், சேறு, ஆழம் நிறைந்த பகுதிகள் போன்ற இடங்களின் தன்மை அறியாமல் குளிக்கச் செல்லக்கூடாது. குடிபோதையில் நீர்நிலைகளுக்கு குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறைந்தபட்ச உயிர் பாதுகாப்பு முதலுதவி முறைகளை தெரிந்து வைத்து எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பெற்றோர்களும், பொதுமக்களும் விழிப்புடன் இருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story