அடிப்படை வசதிகள் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட திருநங்கைகள்


அடிப்படை வசதிகள் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட திருநங்கைகள்
x
தினத்தந்தி 19 Sep 2018 9:00 PM GMT (Updated: 19 Sep 2018 7:30 PM GMT)

பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருநங்கைகள் திரண்டனர். பின்னர் அடிப்படை வசதிகள் கேட்டு சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பழனி, 


பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டனர். அலுவலகத்துக்குள் செல்லாமல் வெளியிலேயே அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளனரா? என கேட்ட போது திருநங்கைகள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. அதில் எங்களில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்துகொண்டனர். நாங்கள் பங்கேற்கவில்லை. இதனால் எங்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து சப்-கலெக்டரிடம் கோரிக்கை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாகவே இன்று (அதாவது நேற்று) சப்-கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்துள்ளோம். எங்களுக்கான அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மேலும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் கள் கொடுக்கும் இடங்கள் பழனியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் எங்களால் பழனிக்கு வேலைக்கு வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பழனி ராமநாதநகர் புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி சப்-கலெக்டரிடம் கொடுக்க வந்துள்ளோம் என்றனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டரிடம் மனுவை கொடுத்தனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து திருநங்கைகள் புறப்பட்டு சென்றனர். 

Next Story