மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் கிலோ கணக்கில் தங்கம்-வெள்ளி நகைகள்
லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கணக்கு வைத்துள்ள கடலூர் வங்கிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவரது பெயரில் இருந்த லாக்கர்களில் சுமார் 10 கிலோ தங்க நகைகளும், 20 கிலோ வெள்ளி நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு (வயது 55) என்பவரையும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரிடம் இருந்தும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து, கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டுக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கு சோதனை நடத்தி அவரது வீட்டில் இருந்த ரூ.30 லட்சத்து 17 ஆயிரத்தை கைப்பற்றினர். அவற்றை விழுப்புரத்தில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். இதேபோல் அதிகாரி பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
அதிகாரி பாபு கணக்கு வைத்துள்ள கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் எழிலரசி, கடலூர் சண்முகம், ஏட்டுகள் விஜயதாஸ், மூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை சென்றனர்.
அங்கு வங்கி அதிகாரிகள், பாபுவின் மனைவி மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலையில் பாபு பெயரில் இருந்த லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து அதில் இருந்த நகைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு கடலூர் பாரதி சாலையில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று பாபு பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து அதில் இருந்த நகைகளையும் வெளியே எடுத்து ஆய்வு செய்தனர். இந்த பணி காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது. ஆய்வு முடிந்ததும் மீண்டும் அந்த நகைகளை அதே லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கணக்கு வைத்துள்ள 2 வங்கிகளில் அவரது பெயரில் இருந்த 3 லாக்கர்கள் திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தது. அவரது பெயரில் உள்ள மேலும் 3 லாக்கர்களை ஓரிரு நாளில் திறந்து ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வு பணி முழுமையாக முடிந்ததும் மொத்தம் உள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை நகை மதிப்பீட்டாளர்கள் மூலமாக சோதனை செய்து கணக்கிடப்படும். அதன் பின்னர் அந்த நகைகள் விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story