கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2018 3:00 AM IST (Updated: 20 Sept 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் தாசில்தாரை கண்டித்து, கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

வேப்பூர் தாலுகா சேப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் மீது தாசில்தார் ஸ்ரீதரன் அளித்த புகார் பற்றி உரிய விசாரணை நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்த விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவின் நடவடிக்கையை கண்டித்தும், கலையரசன் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், விருத்தாசலம் தாசில்தாரை கண்டித்து நேற்று முன்தினம் மாலை கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து பணி செய்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அந்த வகையில், கடலூரில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் கோட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.

இது பற்றி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கோட்ட செயலாளர் ஜெயராமன் கூறுகையில், எங்கள் கோரிக்கையை ஏற்று கலையரசன் மீதான பொய் புகாரை தாசில்தார் வாபஸ் பெற வேண்டும், கலையரசன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நாளை(அதாவது இன்று) கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிறுவிடுப்பு எடுத்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

Next Story